ஜப்பான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் – கிழக்கு ஆளுநர் இடையில் சந்திப்பு

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டங்களின் தளங்களை நேற்று முன் தினம் திங்கட்கிழமை மற்றும் நேற்று செவ்வாய்க்கிழமை ஜப்பானிய தூதர் பார்வையிட்டார்.

மேலும் பல சிறிய நீர்ப்பாசன திட்டங்களையும் அவர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு தூதுவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, ஜப்பானிய அரசாங்கம் அதற்கு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் இதன் போது வாக்குறுதி அளித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு 28 குப்பை சேகரிக்கும் ட்ரக்டர் வண்டிகளை நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 8 ட்ரக்டர் வண்டிகள் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் இலங்கையை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்வதற்கான மனப்பான்மை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாணம் சமூகங்களிடையே ஒற்றுமை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகவும் மாகாணத்தின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் கவனம் செலுத்தி அவற்றை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல விரும்புவதாகவும் ஆளுநர் இதன் போது கூறினார்.