ஜப்பானின் பசிபிக் கடற்கரை பகுதிகளை தாக்கிய டுஜுவான் (Dujuan) சூறாவளியால் பெய்த கனமழையினால் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனகாவா மற்றும் சிபா மாகாணங்களில் ஏற்பட்ட மண்சரிவுகள் வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. யோகோசுகா நகரில் மண்சரிவினால் வீடொன்றுக்குள் சேறும் சகதியும் புகுந்ததில் 60 வயதுகளில் உள்ள பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனகாவா மாகாணத்தின் மியூரா நகரில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
சூறாவளியின் தாக்கத்தால் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்ற அறிவுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிராந்தியத்தில் சுமார் 50,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி தற்போது ஜப்பானை விட்டு வடகிழக்கு திசையில் நகர்ந்தாலும், கனமழையால் நிலப்பரப்பு நிலையற்ற நிலையில் இருப்பதால் மண்சரிவு உள்ளிட்ட அபாயங்கள் தொடரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.










