
ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடும் நடவடிக்கையில் அதிகாரிகள்
-மன்னார் நிருபர்-
மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார். இதனால் தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதியில் காணப்படுகின்ற குன்றும் குழியையும் செப்பனிடும் பணியில் உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டது.
எனினும் குறித்த வீதியை முழுமையாக அபிவிருத்தி செய்ய உரிய திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இவ்விடயம் தொடர்பாக குறித்த வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.
எனினும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.இதனால் குறித்த வீதியூடாக மழைக்காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மன்னாரில் எதிர் வரும் வியாழக்கிழமை இடம் பெறவுள்ள காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற உள்ள நிலையில் ஜனாதிபதி குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் வருகையையொட்டி தற்போது குறித்த வீதியில் காணப்படுகின்ற பாரிய குழி களை நிரப்பி செப்பனிடும் பணியை உரிய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்.
