சீரற்ற கால நிலையினால் திருகோணமலையில் பல குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 25549 குடும்பங்களை சேர்ந்த 84306 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து நவம்பர் 25 டிசம்பர் 02 நேற்று மதியம் மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 634 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17495 குடும்பங்களை சேர்ந்த 59547 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.58 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 7246 குடும்பங்களை சேர்ந்த 22236 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1844 நபர்களும், தம்பலகாமம் 451 குடும்பங்களை சேர்ந்த 1425 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும், சேருவில 1094 குடும்பங்களை சேர்ந்த 3353 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 9516 குடும்பங்களை சேர்ந்த 31803 நபர்களும்,கிண்ணியா 5097 குடும்பங்களை சேர்ந்த 16874 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாகவும் மகாவலி ஆற்றுப்பெருக்கெடுப்பு காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.

தற்போது நீர் மட்டம் குறைவடைந்து செல்வதனையும் அவதானிக்க முடிவதுடன் ஒரு சில பகுதிகளின் போக்குவரத்து வழமைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேலை தம்பலகாமம், கோமரங்கடவல, பதவிசிபுர,குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள இடைத் தங்கல் நிலையங்களில் இருந்தவர்கள் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள இடைத் தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.