சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தரும் போது, அவரை விமான நிலையத்திலேயே நேரில் வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷி ஜின்பிங்கின் அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி வாஷிங்டன் அருகிலுள்ள Joint Base Andrews விமானத் தளத்தை அவர் சென்றடையவுள்ளார்.
வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் விமான நிலையத்துக்குச் சென்று நேரடியாக வரவேற்பது வழக்கமான நடைமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷி ஜின்பிங்கை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்பதுடன், மறுநாள் வெள்ளை மாளிகையில் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வும் இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளன.
செப்டெம்பர் 24ஆம் திகதி ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுங்க வரிகள், அரிய கனிமங்களின் விநியோகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது தொழில்நுட்ப மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் அரசுமுறை விருந்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, OpenAI நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், Nvidia நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்தப் பயணம், அமெரிக்கா–சீனா உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படுகிறது.









