சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க நில அதிர்வு நிபுணர் யூலின் சென் என்பவரை விடுவிக்குமாறு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுப்பார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக சென்னின் மனைவி யூஃபாங் ரோங் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் ஏற்படும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்துவரும் சென், 2024 நவம்பர் 5ஆம் திகதி பெய்ஜிங் விமான நிலையத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன், அவரது ஆய்வுகள் பகிரங்கமாக வெளியிடப்பட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.
54 வயதான சென், அமெரிக்காவால் சீனாவில் “தவறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்” என அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இரு அமெரிக்கர்களில் ஒருவராக உள்ளார். மற்றையவர் ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் மின் ஸின் ஆவார். இருவரையும் விடுவிக்குமாறு ஷியிடம் ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க உள்ளதாக ரோங் தெரிவித்தார்.
ட்ரம்ப் கடந்த மே மாதம் சீனாவுக்கு சென்றிருந்தபோது சென்னின் விவகாரத்தை ஷியிடம் ஏற்கனவே எழுப்பியிருந்த போதிலும், இதுவரை அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என ரோங் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு அமைச்சகம், தனது நீதித்துறை சட்டத்துக்கு அமைவாக வழக்குகளை கையாள்வதாகவும், சீனாவில் “தவறான தடுப்புக் காவல்” என்ற நிலை இல்லை என்றும் முன்னதாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சென்னின் குடும்பத்தினர் அவரது உடல்நலம் மற்றும் தடுப்புக் காவல் நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகள் மாதத்திற்கு ஒருமுறை சுமார் 30 நிமிடங்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரோங் தெரிவித்துள்ளார்.









