சி.வி விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார்?

தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .

இந்நிலையில் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அவர் கடந்த காலங்களில் வடக்கில் மக்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பலர் எழுப்பியுள்ளனர்.

சி.வி விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்யவில்லை என்ற ஒரு கருத்து தமிழ் மக்களிடையே பரவலாக இருந்து வருகின்றது.

இதவேளை சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் எமது செய்தி சேவையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது சி.வி விக்னேஸ்வரன் குறித்து பேசியிருந்தார்.

சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலம் தான் வடமாகாண சபையின் மிக மோசமான ஒரு காலப்பகுதி என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்து சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்திற்கு செய்த சேவையில் ஒரு வீதத்தை கூட விக்னேஸ்வரன் வடக்கு வட மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது வடக்கு மக்களுக்கு செய்யவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என சி.வி விக்னேஸ்வரன் அறிவித்திருப்பது அரசியல் ஆய்வாளர்களிடையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.