-பதுளை நிருபர்-
கன்றுக்குட்டியை திருடிய இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பசறை டெமேரியா முதலாவது பிரிவில் பசு மாட்டின் உரிமையாளர் ஒருவர் தனது பசுவையும், கன்று குட்டியையும் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு வீடு சென்றிருந்தார்.
அதன்பின் மீண்டும் மாட்டை கட்டப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த வேளையில் அவ்விடத்தில் பசுவும் கன்றும் இருக்கவில்லை.
உடன் சுற்றிவர காணப்பட்ட இடங்களில் மாட்டு உரிமையாளர் தேடுதலை மேற்கொண்ட போது, தாய் மாடு நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால், தாய் மாடு காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கன்று குட்டியைத் தேடி மாட்டு உரிமையாளர் செல்லும் போது, கன்று குட்டியை இருவர் விரட்டி செல்வதாக அவ்வீதியால் வந்த ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, டெமேரியா முதலாவது பிரிவில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் பசறை-பதுளை வீதியின் கோயில் கடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியை பார்வையிட்ட போது CCTV காணொளியில் கன்று குட்டியை விரட்டி செல்வது பதிவாகி இருந்தது.
இதன் போது பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், CCTV காணொளியில் பதிவாகியுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
50, 52 வயதுடைய கோயில் கடை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் நேற்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 11திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.