-மன்னார் நிருபர்-
இலங்கை கடற்பரப்பில் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரியும், விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இதில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.