-நானுஓயா நிருபர்-
ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்தார்.
இவ்வாறு காணாமல் போனவர் ராம் மூர்த்தி தமிழ் மாறன் என்ற பாடசாலை எனவும் அவர் ஹட்டன், கொட்டகலை, கேம்பிரிட்ஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர் .
குறித்த மாணவன் தனது 6 நண்பர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் புகைப்படம் எடுக்க நீர்த்தேக்கத்திற்கு மேலே உள்ள சிங்கிமலை வனப்பகுதிக்குள் நுழைந்து பின்னர் நீர்த்தேக்கத்தின் நீரில் கால்களைக் கழுவ முயன்றபோது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர் .
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் தற்போது அதிக நீர்மட்டம் இருப்பதால் காணாமல் போன மாணவரின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மாணவரின் உடலைக் கண்டுபிடிக்க பொலிஸார் இன்றும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.