
சிகிச்சை வழங்க இந்திய வைத்தியக் குழு இலங்கை வருகை!
‘திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தின் “சுரக்ஷா” (Suraksha) நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அவசர மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்கவின் விசேட அழைப்பின் பேரில் இந்த வைத்தியக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வைத்தியக் குழுவினர் பங்கேற்கும் விசேட மருத்துவ முகாம் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
இதில் உள்நாட்டைச் சேர்ந்த வைத்தியர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இந்த விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் குழு இன்று மாலை 4.15 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து ‘இண்டிகோ’ (IndiGo) விமான சேவைக்குச் சொந்தமான 6E-1179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
