குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச மாணவர்கள், ஒருவகை விசாவிலிருந்து மற்றொரு விசாவுக்கு மாறுபவர்கள் மற்றும் பேக்க்பேக்கர்கள் எனப்படும் வேலைவாய்ப்பு சார்ந்த சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலிய அரசு புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
புதிய நடவடிக்கைகளின் கீழ், பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் தங்களுடன் துணைவர் அல்லது குழந்தைகளை அழைத்து வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. அதேவேளை, மாணவர் விசாவிலிருந்து வேறு விசாக்களுக்கு மாறி அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் தங்கும் நடைமுறையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகளுக்கான Working Holiday விசாக்களைப் பெற விரும்பும் பேக்க்பேக்கர்களுக்கு புதிய வாக்குச்சீட்டு (ballot) முறையும், குறிப்பிட்ட பிராந்தியங்களில் பணிபுரியும் நிபந்தனைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்குபவர்களை கண்காணிக்க கூடுதல் இணக்கப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசின் புதிய திட்டத்தின் இலக்கு, நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை தற்போதைய சுமார் 300,000 அளவிலிருந்து 2028ஆம் ஆண்டுக்குள் 225,000 ஆகக் குறைப்பதாகும். அதேவேளை, சர்வதேச கல்வித்துறை அவுஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் A$53.6 பில்லியன் பங்களிப்பதால், புதிய கட்டுப்பாடுகள் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து பல்கலைக்கழகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.









