அரபிக்கடலின் சர்வதேச கடற்பரப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தூதரக அதிகாரிகளை அழைத்து உத்தியோகபூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
செப்டம்பர் 15ஆம் திகதி வடக்கு அரபிக்கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா (INS Kolkata) மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் ஹுனைன் (PNS Hunain)
ஆகிய கப்பல்கள் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதரை அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் நடவடிக்கையை “ஏற்றுக்கொள்ள முடியாததும் தொழில்முறைக்கு முரணானதுமாகும்” எனக் கூறி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அதேவேளை, பாகிஸ்தானும் இந்திய தூதரக அதிகாரியை அழைத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கையை “ஆத்திரமூட்டும்” செயல் எனக் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையிலான ஏற்கனவே பதற்றமான உறவில் புதிய தூதரக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மோதல் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு விளக்கங்களை முன்வைத்துள்ளன.









