சமூக பிணக்குத் தீர்வுகளை வலுப்படுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

 

-கிண்ணியா நிருபர்-

இலங்கையில் சமூகப் பிரச்சினைகளில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை வலுப்படுத்தல் தொடர்பான இரு நாட்கள் கொண்ட பயிற்சிப்பட்டறை ஒன்று கிண்ணியா விசன் மண்டபத்தில் இடம் பெற்றது.

இதனை பயனுறுதிமிக்க வகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) எனும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் பங்களிப்புடன் நிதிப் பங்களிப்பை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியிருந்தது.இரு நாட்கள் கொண்ட குறித்த பயிற்சிப் பட்டறையில் மூதூர்,தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் தெரிவு செய்யப்பட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என சுமார் 30 பேர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழி முறைகள்,முரண்பாட்டு வகைகள் மற்றும் அதனை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது ,தீர்வினை வழங்குதல் உட்பட பல குழு கலந்துரையாடல்டளுடன் திறம்பட பயிற்சியளிக்கப்பட்டது.

சமூக மட்டத்தில் மாத்திரமல்ல தனி நபர்,குழுக்கள் என பல்தரப்பட்ட வகையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன இவ்வாறான நிலையில் தங்களது சமூக மட்ட அமைப்புக்கள் அரச துறை அலுவலகங்களில் ஏற்படும் பிணக்குகளுக்கு தீர்வு காண சிறந்ததொரு பயிற்சியாக இவ் இரு நாட்கள் கொண்ட பயிற்சி பெரும் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்முறைகள் மூலம் ஏற்படும் விளைவுகளை குறைக்க தீர்வுகளை பெறவும் அதற்கான திறன்கள் நுட்பங்களை கையாண்டு சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தவும் இப் பிணக்கு தொடர்பான பயிற்சிப் பட்டறை மேலும் சிறப்பாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பயிற்சி பட்டறைக்கு வளவாளராக எம்.ஜெ.எம்.இர்பான் கலந்து கொண்டு பல வழிகாட்டல்களுடன் திறம்பட விரிவுரைகளை குழு செயற்பாடு மூலமாக வழங்கியிருந்தார்.

இதில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய திருகோணமலை மாவட்ட கள இணைப்பாளர்கள்,தம்பலகாமம் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.