சமூகமே ஒன்றிணைந்து உறுதியான முடிவு எடுத்தால் மட்டுமே போதைப்பொருள் பிரச்சனை குறையும் – பொலிஸார்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் தேசிய வேலைத்திட்டத்தின் பணிகளை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக சமூக பாதுகாப்பு, இளைஞர் நலன், போக்குவரத்து ஒழுங்கு, பாடசாலை மாணவர் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் செயற்படுவதாகவும் அதற்கு பொலிஸ் நிலையத்திற்கான ஆலோசனை சபை ஒத்துழைப்பதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கான ஆலோசனை சபையின் கூட்டம், ஆலோசனை சபையின் செயலாளர் எம்.எம். உதுமாலெப்பை நெறிப்படுத்தலில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே சம்சுதீன் மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.

நிலைய பொறுப்பதிகாரி சம்சுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2019 ஆம் ஆண்டு சாய்ந்தமருது போதைவஸ்து கடத்தலுக்கான முக்கிய இடமாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் அதில் முந்தியடி வீதி, காரியப்பர் வீதி போன்ற பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக போதைவஸ்தின் ஆதிக்கம் கட்டுப்பாட்டில் வந்ததாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியவர்களை ஒரு முறை மட்டுமே புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியும் என்றும் அது நீதிமன்ற நடைமுறைகள் மூலம் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார். அதேபோல் சில சமயங்களில் பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர் புகார் அளித்த பின்னரும், பின்னர் அழுத்தம் கொடுத்து புகார் திரும்பப் பெறுவது காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போவதையும் அவர் சுட்டிக்காட்டினார். சமூகமே இணைந்து செயல்பட்டால்தான் சாய்ந்தமருது முழுமையாக பாதுகாப்பான நகரமாக மாறும் என்றும் “சமூகமே ஒன்றிணைந்து உறுதியான முடிவு எடுத்தால் மட்டுமே போதை பிரச்சனை குறையும்” என அவர் வலியுறுத்தினார்.

போதை வஸ்து பாவனைக்கு எதிராக பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பங்களிப்புடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் தீமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்துதல், மோட்டார் பைசிக்களில் தலைக்கவசம் இன்றி பயணித்தல், மூவர் அதிவேகமாக பயணித்தல், அதனால் விபத்துக்கள் ஏற்படுதல் போன்ற வீதிப்போக்குவரத்து மீறல்களுக்கு எதிராக பொலிசார் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்துதல், வீதிகளில் மாடிகளில் இருந்து மழை காலங்களில் நீரை முறையற்ற விதத்தில் வெளியேற்றுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படல் தொடர்பான விடயத்துக்கு சட்ட நடவடிக்கை எடுத்தல், ஒஸ்மன் வீதி, அல்ஹிலால் வீதி போன்றவற்றில் உள்ள கடைகளுக்கு முன்னால் இருபக்கமும் மோட்டார் பைசிக்கிள், வாகனங்கள் நிறுத்துவதால் பாதையால் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அல்-ஹிலால் வித்தியாலயம், ஜீ.எம்.எம்.எஸ்.பாடசாலை போன்றவற்றின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பாடசாலை முடிவின் பின்னர் அவர்களை கொண்டு செல்லும் ஆட்டோ வரும் வரை மாணவர்கள் அங்குமிங்கும் பாதைகளில் அலைவதால் போக்குவரத்து செய்யும் வாகனங்களினால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளமையும் அதற்கான பாதுகாப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் பொலிஸ் நிலைய அன்றாட செயற்பாடுகளை சீராக கொண்டு செல்வதற்கு போதிய பொலிஸார் இன்மை பற்றி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை குழுவினர் நேரடியாக சந்திப்பது போன்ற முடிவுகளும் எட்டப்பட்டன.