
சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது
-மன்னார் நிருபர்-
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரை சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஓலைத்தொடுவாய் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன் போது 4 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 968 கடலட்டைகள், 34 சங்குகளும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சங்குகள் ஏல விற்பனை ஊடாக விற்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




