கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது காட்டு யானை மோதல்

தம்புள்ளை பகமுன பிரதான வீதியில் உள்ள ரிதியெல்ல சரணாலயப் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது காட்டு யானை மோதியதில், பாரவூர்தி கவிழ்ந்து, ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஏராளமான கோழிகள் இறந்துள்ளதாகவும், காட்டு யானை காட்டுக்குள் தப்பிச் சென்றதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளையிலிருந்து பகமுன நோக்கி பாரவூர்தி வேகமாகச் சென்றபோது, ​​யானை ஒன்று தற்செயலாக வீதியின் குறுக்கே வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பாரவூர்தியில் பயணித்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

பாரவூர்தி காட்டு யானை மீது மோதியதா, காட்டு யானை காயமடைந்ததா என்பதை இன்னும் சரியாகக் கண்டறிய முடியவில்லை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், பாரவூர்தியில் 1,100க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்ததாகவும், பாரவூர்தியின் மூன்று பேர் பயணம் செய்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.