“கொழும்பு மாரத்தான் 2026(Colombo Marathon 2026)” சர்வதேச மரதன் போட்டி நாளை (13) நடைபெறவுள்ள நிலையில், கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போட்டி காலை 6 மணிக்கு தேசிய விளையாட்டு அதிகாரசபை (NSA) வளாகத்தில் ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி மற்றும் மரைன் டிரைவ் ஊடாக காலி முகத்திடலை சென்றடையவுள்ளது. இதனால், போட்டிப் பாதையில் உள்ள பல வீதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
மரைன் டிரைவ் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சந்தியில் மாற்றுப் பாதைக்கு திருப்பிவிடப்படவுள்ளன. தேஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் M.O.D. சந்தி, கொம்பனித்தெரு, வெலிக்கடை மற்றும் பொரளை ஊடான மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மரதன் போட்டியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக சுமார் 175 முதல் 177 மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் வாகன சாரதிகளும் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










