
கைபேசி மூலம் ஹெரோயின் விற்பனை : சந்தேக நபர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை மொறவெவ பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
தொலைபேசி ஊடாக EZ கேஸ் மூலம் பணத்தை செலுத்திய பின்னர் குறித்த நபர் இளைஞர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது நான்கு ஹெரோயின் போதைப் பொருள் பக்கெட்டுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-வில்கம் விகார, பன்சல வீதியைச் சேர்ந்த விக்ரமகே ஜகத் ரோஹன (45வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக கந்தளாய் 96 ஆம் கட்டை பகுதியில் உள்ள நபரொருவர் பக்கட் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்களை தம்மிடம் வழங்கியதாகவும், EZ cash ஊடாக தனக்கு பணம் செலுத்திய பின்னர் தான் கொடுக்கச் சொல்லும் நபர்களுக்கு ஹெரோயின் போதைப் பொருட்களை கொடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் குறித்த சந்தேக நபரிடம் போக்குவரத்து செலவுக்கு மாத்திரம் கையில் பணம் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
