கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஆயுதங்கள் மீட்பு
தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின் போது , கெஹெல்பத்தர பத்மே’வுக்கு சொந்தமான இந்த ஆயுதங்கள் வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் பராமரிப்பில் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ஒன்றும், ரி-56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு மெகசின்கள் மற்றும் ரி-56 ரக 267 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
எந்தேரமுல்லவிலிருந்து கொழும்பு – கண்டி வீதி வரை உள்ள குறுக்கு வீதியில் அமைந்துள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறை ஒன்றைச் சோதனையிட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் களனி முகாம் அதிகாரிகளின் உதவியுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
