கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த டிராக்டர் விபத்து : 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வட மாநிலமான உத்தர பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசம் மிர்சா பூரில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

13 கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மிர்சா பூரிலிருந்து வாரணாசி நோக்கி பயணித்த டிராக்டர் மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தொழிலாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பானு பிரதாப் (வயது 25), விகாஸ் குமார் (வயது 20), அனில் குமார் (வயது 35), சூரஜ் குமார் (வயது 22), சனோகர் (வயது 25), ராகேஷ் குமார் (வயது 25), பிரேம் குமார் (வயது 40), ராகுல். குமார் (வயது 26), நிதின் குமார் (வயது 22), ரோஷன் குமார் (வயது 17) ஆகிய 10 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

ஆகாஷ் குமார் (வயது 18), ஜமுனி (வயது 26), அஜய் சரோஜ் (வயது 50) ஆகிய மூவர் காயமடைந்து வாரணாசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.