முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதை முன்னிறுத்தி, சிங்கம் மற்றும் குட்டிச் சிங்கத்தின் காட்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இந்தக் காணொளியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுர மாவட்ட பிரதம அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் பேரணிக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
காணொளியில், ஆபத்தை எதிர்கொள்ளும் குட்டிச் சிங்கம் ஒன்று காண்பிக்கப்படுவதுடன், அதனைப் பாதுகாப்பதற்காக வயது வந்த சிங்கம் ஒன்று வந்து சேரும் காட்சி இடம்பெறுகிறது. பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் காட்சிகள் இடம்பெறுவதுடன், “சிங்கம் அனுராதபுரத்திற்கு” என்ற சிங்கள வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பேரணியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆதரவாளர்களைத் திரட்டும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அனுராதபுரத்தில் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.










