இலங்கையில் நிலவும் கடும் மழையுடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குகுலேகங்க பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 206 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று (21) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்கான மழைவீழ்ச்சிப் பதிவுகளின்படி, நாட்டில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சியாக இது காணப்படுகிறது.
இதனிடையே, களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதால் வெள்ள அபாயம் தொடர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மில்லகந்த பகுதியில் சிறிய அளவிலான வெள்ள நிலைமையும் நீடித்து வருகிறது.
இதேவேளை, மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்மட்ட உயர்வை தொடர்ந்து அவதானித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










