
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்க நடவடிக்கை
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் கடந்த ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்த ஆசிரியர்களுக்கு பாடசாலை விடுமுறைக்காலத்தின் போது வழங்கப்படாதிருந்த ஒரு மாத காலத்திற்கான சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக, கிழக்கு மாகாணத்தில் சுமார் ஐம்பது ஆசிரியர்கள் சம்பள நிலுவையினைப் பெறுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கடந்தகாலங்களில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து ஆசிரியர்களும் உரிய முறைப்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இவ்வாறான சம்பள நிலுவையினைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லினின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினையடுத்து மாகாண கல்வித்திணைக்களம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இணைப்பாளர் ஆர். றிக்னாஸ் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் புதிய பணிப்பாளர் எம்எம். ஜவாத் ஆகியோருக்கிடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
இதன்போது இவ்வலயத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவையினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அத்துடன் ஏனைய மாகாணங்களில் இவ்வாறான சம்பள நிலுவை உரியகாலத்தில் வழங்கப்பட்டுவருகின்றபோதிலும், கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இவ்வாறான சம்பள நிலுவை வழங்கப்படாதுள்ளதை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாக ரீதியில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இப்பிரச்சினைகளை சீர்செய்ய மிகவிரைவில் நடவடிக்கை எடுப்பதாக பணிப்பாளர் எம்எம். ஜவாத் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் கல்வி வலயத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏஏ. நாஸர் மற்றும் இடமாற்ற மேன்முறையீட்டு சபை பிரதிநிதி எச்எம்எம். றிபாய் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


