கிழக்குமாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக இடை நிறுத்தம் : கணினி பிரிவில் ஊழல்?
கிழக்குமாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் குறித்த நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியலில் உள்ள குழறுபடிகள் காரணமாக இந்நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெயர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் அவரது கனவத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து குறித்த பெயர் பட்டியலை மீள்பரிசோதித்த கிழக்கு ஆளுநர் அதில் தவறுகள் இருப்பதை கண்டு பிடித்து அதை சரி செய்வதற்கு விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும் கிழக்கு மாகாண சபையின் கணினி பிரிவில் ஆசிரியர் நியமனம் வழங்கும் விடயத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பில் 117 புள்ளிகள் எடுத்த பட்டதாரி ஒருவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் 175 புள்ளி எடுத்த பட்டதாரியின் பெயர் குறித்த பட்டியில் இல்லை எனவும் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கின்றது
எனினும் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து இந்நிழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் எவ்வித உத்தியோபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்