கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு பயிற்சி தொடர்பான ஒத்திகை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக உற்பத்தித் திறன் பிரிவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கட்டடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளினை அனர்த்த காலங்களில் உடனடியாக களத்தில் எல்லோரும் பயன்படுத்துதல் மற்றும் குறித்த கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக செயன்முறை ரீதியாக விழிப்புணர்வூட்டும் நோக்கில் இது நடைபெற்றது.

இதன்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, விபத்து ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்பு கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் கையாளுகை தொடர்பாக தெளிவூட்டல் பற்றி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா  ஒத்திகையின் மூலம் விளக்கினர்.

தொடர்ந்து தீயணைப்பு கொள்கலன்களை கையாளுகின்ற முறைமை தொடர்பாக செயன்முறைரீதியாக விளக்கமளிக்கப்பட்டு, உத்தியோகத்தர்களும் கையாளுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டு தெளிவூட்டப்பட்டுள்ளது.

குறித்த செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள், உற்பத்தித்திறன் பிரிவின் உத்தியோகத்தர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.