கிரிக்கெட் போட்டியில் மோதல் : அணியின் உபதலைவர் வைத்தியசாலையில் அனுமதி

இரு பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற பிக் மேட்ச் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில்,  அணியின் உப தலைவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை திஸ்ஸ கல்லூரி மற்றும் களுத்துறை மகா வித்தியாலயத்திற்கு இடையிலான பிக் மேட்ச் போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் களுத்துறை திஸ்ஸ கல்லூரி கிரிக்கெட் அணியின் உப தலைவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மகோன சர்ரே விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியின் முடிவில் மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மகா வித்தியாலயத்தின் கடைசி ஓவரில் வெற்றி பெற்றதையடுத்து,  இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் மைதானத்திற்குள் பிரவேசித்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

மைதானத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோதலை கட்டுப்படுத்தியதாகவும், அதேவேளை தாக்குதல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிரணி பாடசாலை மாணவர்களால் தனது மகன் தாக்கப்பட்டதாகவும், தனது பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவனின் தாயார் பயாகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, களுத்துறை திஸ்ஸ கல்லூரி கிரிக்கெட் அணியின் உபதலைவர்,  முதலில் நாகொட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவசர சத்திரசிகிச்சைக்காக  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார், என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்