காஸாவில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதன் விளைவாக, இஸ்ரேலும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மத்தியதரைக் கடலில் கலப்பதால் உருவான கடற்பாசி பெருக்கம், இஸ்ரேலின் கடல்நீர் உவர்நீக்க நிலையங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் ஆறு முக்கிய கடல்நீர் உவர்நீக்க நிலையங்களில் ஐந்து நிலையங்கள் கடற்பாசி காரணமாக சில நாட்களுக்கு செயலிழந்ததுடன், தற்போது குறைந்த திறனில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தெற்கு பகுதிகளில் நீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கு பாசன நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, காஸாவில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அங்குள்ள ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது செயல்படாத நிலையில் இருப்பதுடன், சுமார் 70 சதவீத கழிவுநீர் உந்துநிலையங்களும் செயலிழந்துள்ளன. இதன் காரணமாக நாளொன்றுக்கு 150,000 கன மீற்றருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சுற்றுச்சூழலுக்குள் வெளியேறுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர்களின் கூற்றுப்படி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் கடற்பாசி பெருக்கத்தை தீவிரப்படுத்தி, இஸ்ரேலின் குடிநீர் உற்பத்தி உட்கட்டமைப்புக்கு மேலதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









