
காப்புறுதி பணத்தை பெற நண்பனை வைத்து மனைவியை கொன்ற இளைஞன்
ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பிடிகல பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தனது நண்பருக்கு 20 இலட்சம் ரூபாவையும், வாடகை வாகனம் ஒன்றையும் கொடுத்து, விபத்தை ஏற்படுத்தி தனது மனைவியை கொலை செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி எல்பிட்டிய, பிடிகல – மாபலகம பிரதேசத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை விபத்துக்குள்ளாக்கிய ஜீப் ரக வாகனம் சம்பவம் இடத்திலிருந்து தப்பிச்சென்றிருந்தது.
இது குறித்து எல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர் என்றும் அவர் 4 நிறுவனங்களிடம் 50 இலட்சம் ரூபாவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மனைவியை கொலை செய்து அதனை விபத்து என காப்புறுதி நிறுவனங்களிடம் நிரூபித்து ஆயுள் காப்பீட்டுகளை பெறுவதற்கு சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
