காதலித்த தங்கையை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்

கம்பஹா மாவட்டம், பியகமவில் தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், நேற்று வியாழக்கிழமை மாலை அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா (வயது – 18 ) என்ற உயர்தர வகுப்பு மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியும் அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விடயம் சில நாட்களுக்கு முன்னர் மாணவியின் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆத்திரமுற்ற மாணவியின் மூத்த சகோதரன், தங்கையுடன் நேற்றுமுன்தினம் புதன் கிழமை வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் சித்திரவதை தொடர்பில் காதலனுக்குக் குறித்த மாணவி தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தியுள்ளார்.கடும் கோபமடைந்த ஹிருணிகாவின் காதலன், அவரின் மூத்த சகோதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் காதலுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஹிருணிகாவின் மூத்த சகோதரன், காதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு சகோதரியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உடன்படாத நிலையில், கத்தியால் அவரின் கழுத்தை அறுத்துள்ளார்.

காயமடைந்த ஹிருணிகாவை, அவரின் குடும்பத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலை தொடர்பில் ஹிருணிகாவின் 25 வயதுடைய மூத்த சகோதரனையும், காதலனான 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்