காதலர்கள் தங்கிய அறையின் கட்டிலுக்கு கீழே பணியாளர்

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேனி பகுதியில் பேர்ல் பீச் எனும் பெயரில் காதல் திரைப்பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசனுக்கு சொந்தமான விடுதி ஒன்றில் காதலர்கள் தங்கியிருந்த அறையில், அத்துமீறி நுழைந்த பணியாளர், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சீக்கினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பணியாளராக வேலை பார்த்துவந்த சுபாஷ் என்பவரே குறித்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த இளைஞர் கடந்த 19ஆம் திகதி இரவு தனது காதலியுடன் குறித்த விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நள்ளிரவில் காதலர்கள் இருவரும் அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது மாற்று சாவியை பயன்படுத்தி அறையின் கதவை திறந்த சுபாஷ், உறங்கி கொண்டிருந்த இளைஞரின் காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தனது காதலன் தன்னிடம் இது போன்று நடந்து கொள்ள மாட்டாரே என சுதாரித்துக்கொண்ட பெண் வேகமாக எழுந்து அறையின் விளக்கைப் போட்டுள்ளார். அப்போது காதலன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததைப் பார்த்து அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

காதலன் உறங்கி கொண்டிருக்கும் போது வேறு யார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது என அறை முழுக்க சுற்றிப் பார்த்த பெண், கட்டில் கீழே பார்த்துள்ளார். அங்கு சுபாஷ் மறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இளம்பெண் கத்தி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு எழுந்த காதலன் சுபாசை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தார். அதே விடுதியில் தங்கியிருந்த இளைஞரின் நண்பர்களும் சுபாஷ் அடித்து உதைத்து கூவத்தூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சுபாஷின் செல்போனை சோதனையிட்டதில் குறித்த விடுதியில் அறை எடுத்து தங்கிய பல்வேறு பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சுபாஷை கைது செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.