
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர் நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் குறித்த கிணறு பெக்கோ இயந்திரம் மூலம் இன்று அகழ்வு செய்யப்பட போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த சேருநுவர-தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என தெரியவருகின்றது.
மீட்கப்பட்ட சடலமானது சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன் யுவதியின் கைப்பையும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி, காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் பின்னணி
சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற குறித்த யுவதியும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் விஷ்னுகாந்த் (வயது 25) என்ற இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்வருகின்றது.
இந்நிலையில் கடந்த மே மாதம் குறித்த யுவதி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் மட்டக்களப்பில் வசித்து வந்ததாகவும் மே மாதம் 31ஆம் திகதி மாலை அழுது கதைத்த குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்ததோடு அன்றையதினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்துள்ளார்.
இதன்போது வீட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளார் அதன் பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து குறித்த காதலனின் இலக்கத்திற்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும் யூன் மாதம் 13ஆம் திகதி அழைப்பை எடுத்து தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்க கொடுப்பதாகவும் குறித்த யுவதியின் தம்பியிடம் யுவதியின் காதலன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் யுவதியின் குடும்பத்தாரால் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் யூலை மாதம் 1ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யுவதியின் காதலன் தலைமறைவாகியுள்ளார்
சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
