கழிவறையில் இருந்த கரு நாகம் : வைரல் வீடியோ!

இந்தியாவில் ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணி புக் செய்திருந்த ஹோட்டல் கழிவறையில் ஐந்து அடி கடும் விஷம் நிறைந்த கரு நாகம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பிரபல யாத்திரை நகரமான புஷ்கருக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் அங்கிருந்த ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக அறையை வாடகைக்கு எடுத்தனர். அவர்கள் வாடகைக்கு எடுத்த அறை அந்த ஹோட்டலின் இரண்டாவது மாடியில் இருந்தது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் அறையின் கழிவறையைப் பயன்படுத்த உள்ளே சென்றார். அப்போது, சுமார் ஐந்து அடி நீளமுள்ள கடும் விஷம் நிறைந்த கரு நாகம் ஒன்று அந்தக் கழிவறையினுள் இருந்து சீறியுள்ளது.

இதனைப் பார்த்துப் பதறிய அந்த நபர் உடனடியாக, கழிவறையின் கதவை மூடிவிட்டு, ஹோட்டல் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்தத் தகவலைப் பெற்ற ஹோட்டல் ஊழியர்கள், உடனடியாகப் பாம்பு பிடிப்பவர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு விரைந்து வந்த பாம்பு பிடிப்பவர்கள், இரண்டாவது மாடியில் இருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று, கழிவறையைத் திறந்து பார்த்தனர்.

அப்போது, கழிவறைக்குள் இருந்த அந்தக் கரு நாகம் மிகவும் ஆக்ரோஷத்துடன் சீறியபடியே இருந்தது.

துரிதமாகச் செயல்பட்ட பாம்பு பிடிக்கும் நபர்கள், ஆக்ரோஷத்துடன் சீறிய அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர் அதனைப் பாதுகாப்பாக அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

பாம்பு பிடிப்பவர்கள் வந்து, பாம்பைப் பிடிக்க முயன்றபோது அந்தக் கரு நாகம் ஆக்ரோஷத்துடன் சீறிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.