கல்வி ஊக்குவிப்பு புலமைப் பரிசில் உதவிக்கான அங்குரார்பண நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், திறமை இருந்தும் பொருளாதார வசதி குறைவால் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகையாக விசேட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் LIFT நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினூடாக 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கு தோற்றவுள்ள 20 மாணவர்கள் நன்மையடையவுள்ளனர்.

ஒரு விசேட புலமைப்பரிசில் பரீட்சை மூலம் இம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களது குடும்ப பொருளாதார பின்னணி ஆராயப்பட்டு இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் விசேட வகுப்புகளுக்கு செல்வதற்காக சராசரியாக க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாவும், க.பொ.த உயர்தர மாணவர் ஒருவருக்கு 6500 ரூபாவும் வீதம் 24 மாதங்களுக்கு அவர்களது பிரத்தியேக வகுப்புத் தேவைகளுக்காக வழங்கப்பட உள்ளது.

கல்குடா வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கான நிதி மனித நேயம் நம்பிக்கை நிதியத்தால்  வழங்கப்பட்டது.

இரண்டு வருட கால திட்டத்திற்கான இந்த அங்குரார்பண நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகம் சார்பில் கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் திரு.தினகரன் ரவி, பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.துஷ்யந்தன் மற்றும் ஏனைய கல்விசார் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களும் LIFT நிறுவனம் சார்பில் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. ஜானு முரளிதரன், நிதிப்பணிப்பாளர் ஜெபராஜ் நடராஜா, திட்ட உத்தியோகத்தர் தயாநிதி, கள உத்தியோகத்தர் செல்வி.தனுக்‌ஷா துஷ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை சார்பில் அதிபர்கள், பிரதி அதிபர்கள், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.