
கல்கிசை பகுதியில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று
கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13 ஆவது மாடியில் இருந்து நேற்று அதிகாலை 2.40 அளவில் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், வெள்ளவத்தையில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவனான 29 வயதுடைய தமது நண்பரை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி குறித்த பெண் இலங்கை வந்துள்ளதாகவும் இருவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 6 மாதங்களாக ஒன்றாக வசித்து வந்ததுடன், குறித்த இளைஞனும் கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்று நாட்டிற்கு வந்துள்ளார்.
ஃபேஸ்புக் மூலம் இருவரும் காதல் உறவை வளர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த பெண் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த வேளை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
காதலனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மேலும் 6 பியர் கேன்களை குறித்த இளைஞர் அருந்தியுள்ள நிலையில், இரவு உறங்கச் சென்ற போது காதலியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார். பின்னர் காதலியை தேடிய போதே சடலத்தை கண்டதாக பொலிஸாரிடம் இளைஞர் கூறியுள்ளார்.
நேற்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிசை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரேத பரிசோதனை தொடர்பில் எமது மின்னல் 24 செய்தி அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு வினவிய போது இது தொடர்பிலான தகவல்களை தரமுடியாது என களுபோவில போதனா வைத்தியசாலை வட்டாரங்களினால் எமக்கு கூறப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
