வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு இலங்கைக்கு வடகிழக்கே சுமார் 1,000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இன்று காலை 5.30 மணியளவிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கத்தால் வங்காள விரிகுடா கடற்பரப்பில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடற்பரப்புகளுக்குள் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். திருகோணமலை முதல் சிலாபம் வரையிலும், காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாகவும், காலி முதல் பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணிக்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது திடீரென பலத்த காற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலையும் ஏற்படக்கூடும் என்பதால், கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் தொடர்ச்சியாக வானிலை அறிவிப்புகளை அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.









