கத்திக்குத்து தாக்குதல்: 22 வயது இளைஞன் பலி

கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

மட்டக்குளிய பகுதியை சேர்ந்த 22 வயதுடையவரே இதன் போது கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

உயிர் இழந்தவருக்கு தொலை பேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து குறித்த நபர் புளூமெண்டல் ரயில் பாதைக்கு வந்துள்ளார்.  குறித்த பகுதியில் இருந்த நபர் உயிர் இழந்த நபரை வேறு ஒரு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் குறித்த பகுதிக்கு வந்த இனம் தெரியாத குழு அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளம் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை.

மேலும் சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொட்டாஞ்சேனை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.