கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜயம்

 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் இராஜீவ் அமரசூரிய, நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம் மற்றும் கண்டி சட்டத்தரணிகள் வளாகத்திற்கு இன்று புதன்கிழமை  விஜயம் செய்தார்.

கண்டி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வெளிமாவட்ட சட்டத்தரணிகள் குழுவின் அமைப்பாளர் ஆகியோருடன் இணைந்து தாம் நீதிமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்ததாகவும், பல நீதித்துறை அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் இராஜீவ் அமரசூரிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

“நீதிமன்றக் கட்டடங்கள், சட்டத்தரணிகள் வளாகம் மற்றும் பாரிய இழப்பைச் சந்தித்த சட்ட நூல் நிலையம் ஆகியவற்றிற்கு வெள்ளத்தால் ஏற்பட்ட விரிவான சேதங்களை நேரில் பார்த்தபோது ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.” என தெரிவித்தார்.

“இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யும். இந்த முயற்சி ஏற்கனவே பெற்றுள்ள வலுவான உத்வேகத்தால் நான் உற்சாகமடைகிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.