-அம்பாறை நிருபர்-
கடை ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும், கடை தொகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அனர்த்தத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் சடலத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டதுடன், சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து, சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை நடவடிக்கையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, கொழும்பில் உள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு உயிரிழந்தவரின் சில உடற்பாக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டள்ளது.
சம்பவத்தில், பிறந்து 12 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றின் தந்தையான சாய்ந்தமருது பிரிவு 16 அஹமட் வீதியை சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தர் ஓடாவி வேலைக்காக சென்ற நிலையில், வேலை செய்து கொண்டிருந்த போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் தவறி விழுந்து, சம்பல இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
மேலும், குறித்த இளம் குடும்பஸ்தர் மலசலகூட குழியில் விழுந்த போது, அவரை காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட மாவடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் றிபான் (வயது-42) என்பவர், காயமடைந்த நிலையில் அபாயக் குரல் எழுப்பியபோது, அங்கிருந்த மற்றைய பணியாளர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பொலிஸாரின் புலன் விசாரணை மற்றும் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸ் தடயவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
