இலங்கையின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 16 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியதுடன், கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திறந்த வெளிகள், வயல்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தின்போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்ப்பதுடன், மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் கம்பி தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










