கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று, தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும், மணிக்கு 35 – 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடைக்கிடையில் 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும். சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 – 55 கிலோமீற்றர் வரை காற்று அதிகரித்து வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.