கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என குறித்த மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 20 ஆம் திகதி சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10 மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .

வட்டாரம் 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான குட்டிராசா சசிக்குமார் (வயது 45 ), இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகையா சுஜந்தன் (வயது 32) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நேற்றையதினம்  7 படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டு அன்று இரவு திரும்பியுள்ளதாகவும், இன்றைய தினம்   அதிகாலை திருக்கடலூர் பகுதியில் இருந்து 9 படகுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை, என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்களை தேடி சல்லி பிரதேச மீனவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ள நிலையில், இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்