இலங்கை கடற்படையின் P 4447 அதிவேக தாக்குதல் படகு (Fast Attack Craft) வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி அங்குலான கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது படகு ஆபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட பல கட்ட அவசர நடவடிக்கையின் இறுதியில் இந்த மீட்பு இடம்பெற்றுள்ளது.
சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகு செப்டம்பர் 11-ஆம் திகதி கடலிலிருந்து மேலெடுக்கப்பட்டு, பின்னர் கொழும்பு டொக்யார்ட் வளாகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. பொறியியல் மற்றும் நீர்மூழ்கல் பிரிவுகளின் தொழில்நுட்ப அறிவு, தொழில்முறை திறன் மற்றும் ஒருங்கிணைந்த குழுப்பணியின் மூலம் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் இலங்கை கடற்படை, விமானப்படை, பொலிஸார் மற்றும் அங்குலான பகுதி உள்ளூர் மீனவர்கள் இணைந்து செயல்பட்டு, படகில் இருந்த 11 பணியாளர்களை உயிருடன் மீட்டனர். மனிதர்களை மீட்கும் நடவடிக்கை செப்டம்பர் 4-ஆம் திகதி படகின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டதுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, கடலில் மூழ்கிய படகை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடுமையான கடல் சீற்றம் மற்றும் ஆபத்தான நீருக்கடிப் பகுதிகளுக்கு மத்தியிலும், கடற்படையின் சிறப்பு நீர்மூழ்கல் மற்றும் மீட்புக் குழுவினர் பல்வேறு கட்டங்களாக படகை மேலெடுத்தனர்.
கடல், கப்பல் உடற்பகுதி, மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த குழுக்கள் சிறப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியதுடன், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.
இந்த மீட்பு நடவடிக்கை கடற்படையின் நீர்மூழ்கல் வீரர்கள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புடன் மட்டுமன்றி, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு டொக்யார்ட் பிஎல்சி வழங்கிய தொழில்நுட்ப ஆதரவின் மூலமும் வெற்றியடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.










