கடற்கரையில் உடலுறவுக்கு தடை!

 

நெதர்லாந்தில் வீரே நகரில் உள்ள ஒரு கடற்கரையில் எப்போதுமே காதலர்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம்.

குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் மாலை வேளைகளில் திரும்பிய திசையெல்லாம் காதல் ஜோடிகளே கண்ணுக்கு தெரிவார்களாம்

தனிமையில் அமர்ந்து காதல் செய்யும் இவர்கள்  சில நேரங்களில் மெய்மறந்து எல்லைமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். குடும்பமாக இங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் காதலர்களின் செயல்கள் அருவெறுக்கத்தக்க வகையில் உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும் இதனால் தங்களது குழந்தைகளுடன் இங்கு வரும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகிறார்கள். பொது இடமாயிற்றே; நம்மைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்களே என்ற எண்ணம் கூட இல்லாமலேயே சில காதலர்கள் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த செயலை பார்க்கும் சிறுவர்கள், மாணவர்களின் மனதில் காதல் ஜோடிகள் நஞ்சை விதைக்கின்றனர். அங்குள்ள கடற்கரையிலும் அருகே இருக்கும் சிறு குன்றுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில ஜோடிகள் முன்கூட்டியே திட்டம்போட்டு வந்து கடற்கரையில் அத்துமீறல்களை அரங்கேற்றுகிறார்களாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து அடுக்கடுக்காக புகார்கள் குவிந்த நிலையில், தற்போது அந்த கடற்கரையில் உடலுறவு கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை பொது வெளியில் எல்லைமீறிய ஜோடிகளிடம் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில்  இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் கடற்கரையில் நிர்வாணமாக சன் பாத் எடுக்கவரும் அனைவரும் இதுபோல அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதில்லையாம். அதனால் அரசின் திடீர் உத்தரவால் சன் பாத் பிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவெளியில் உடலுறவு கொள்பவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் அவர்கள் நிர்வாணமாக சன் பாத் எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கின்றனர்.

இதுகுறித்து வீரே நகர மேயர் ஃபிரடெரிக் ஷோவெனார் கூறுகையில்,  ‘இந்த குன்றுகள் உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவை. இதை நாம் பாதுகாக்க வேண்டும். இருப்பினும், விடுமுறைக்கு வருவோர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்