லிபியாவின் மிஸ்ராத்தா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் செப்டம்பர் 14ஆம் தேதி இடம்பெற்றது.
இஸ்தான்புல்லில் இருந்து வந்த Cessna Citation ரக தனியார் விமானம், தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை விட்டு விலகியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணிகள் எவரும் இருக்கவில்லை; மூன்று பேர் கொண்ட விமானக் குழுவினர் அனைவரும் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
விமானம் தீப்பிடித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தின. விமான நிலையத்தின் ஓடுபாதையின் நிலைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லிபிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.









