
ஒரு மாத காலப்பகுதியில் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : 22 சிறுமிகள் கர்ப்பம்
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று புதன்கிழமை உரையாற்றிய அவர், குறித்த துஷ்பிரயோக சம்பவங்கள் 2023 செப்டம்பர் 01 முதல் 30 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 168 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்திருப்பது நம் நாடு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இருப்பதை காட்டுகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்களில் பிள்ளைகள் நெருங்கிய உறவினரால் அல்லது அவர்களது சொந்த வீட்டில் உள்ள ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வலியுறுத்தினார்.
