அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் போர் நிறுத்தம் அல்லது சமாதான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டை “அழித்தொழிக்க” நேரிடும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஈரானுடன் ஒரு உடன்பாடு ஏற்படுத்துவதா அல்லது இஸ்லாமிய குடியரசை விரைவாக அழித்தொழிப்பதா என்பது குறித்து தமக்கு “ஒரு பெரிய முடிவு” எடுக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதற்காகவே அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததாக தனது உரையில் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஈரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அது அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் நடைபெறலாம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
எனினும், ட்ரம்பின் கடுமையான உரைக்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் ஐ.நா. கூட்டத்தொடரின் பக்கவாட்டில் சுமார் மூன்று மணி நேரம் சந்தித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தரப்பில் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்றதாக அவர் கூறியதுடன், சந்திப்பு “மிகவும் சிறப்பாக” நடைபெற்றதாகவும் தெரிவித்தார். எனினும், பேச்சுவார்த்தையில் ஈரான் சார்பில் யார் பங்கேற்றனர் மற்றும் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பில் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.
ட்ரம்பின் உரையின்போது ஈரான் தூதுக்குழுவில் பெரும்பாலானோர் சபையிலிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஈரான் போர், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச நெருக்கடிகள் தொடர்பாக ட்ரம்ப் பல உலகத் தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளையும் நடத்தி வருகிறார்.









