
ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டதையடுத்து அவர், துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த 19ஆம் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தொடர்பில், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்தது.
குறித்த விசாரணைகளின்போது, சந்தேகநபர் 08.11.2024 அன்று மருதானை – நெலும் குளுன் பகுதியில் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
