அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதல் ‘இணை உறுப்பு நாடாக’ இணைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு “மிகவும் கடுமையான வரிகளை” விதிக்கலாம் அல்லது சில வர்த்தகங்களை நிறுத்தலாம் என எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன், செப்டம்பர் 16ஆம் திகதி தனது வருடாந்த State of the Union உரையில், கனடாவுடன் வர்த்தகம் மட்டுமன்றி பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய “Alliance for the Future” கூட்டாண்மையை முன்மொழிந்தார்.
இந்தத் திட்டம் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும், ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து தமது வலிமையை அதிகரிப்பதே நோக்கம் என்றும் வொன் டெர் லெயன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ‘இணை உறுப்பு நாடு’ என்ற அந்தஸ்துக்கு தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளில் தெளிவான சட்ட மாதிரி இல்லை என்பதால், இந்தத் திட்டம் குறித்து உறுப்பு நாடுகளிடையே மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.
கனடா பிரதமர் மார்க் கார்னியும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் உள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது சர்வதேச வர்த்தக மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை பன்முகப்படுத்த முயன்று வருகிறது.










