எரிந்த நிலையில் மீட்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவரின் உடல்

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல் தோட்டுபொல கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை முச்சக்கர வண்டிக்குள் குற்றப் புலனாய்வுப்  பிரிவில் பணியாற்றிய ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய ஜயந்த புஷ்பகுமார (வயது – 56) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

எரிந்த நிலையில் காணப்பட்ட முச்சக்கரவண்டியை கவனித்த மக்கள் பின்னர், இன்று காலை கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, பொலிஸாரும் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் நீதவான் விசாரணைக்குப் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.